1) உதவி இயக்குனர் விஷால், - தயாரிப்பாளர் விஷால் என்ன வித்தியாசம்?
உதவி இயக்குனர் விஷாலுக்கு, மெச்சூர்டா எதுவும் யோசிக்க தெரியாது. ஆனால், தயாரிப்பாளர் விஷால் அப்படி அல்ல. பல பிரச்னைகளை சந்தித்து, ஒரு மெச்சூர்டு லெவலுக்கு வந்திருக்கும் விஷால். அர்ஜுன் சார்கிட்ட வேலை கேட்டு வரிசையில் நின்னப்பவும் சரி; இப்ப உங்க முன்னாடி தயாரிப்பாளரா நிற்கும் போதும் சரி. நிறைய விஷயங்களை கத்திட்டுருக்கேன்.
2) சினிமாவில் நீங்க எடுத்த ரிஸ்க்?
'அவன் இவன்' படத்தில், ரொம்ப ரிஸ்க் எடுத்து நடித்தேன். இப்போ, அதை நினைச்சு பார்க்கும் போது கூட, அவ்ளோ வலியாக இருக்கும். அந்த வலியை தாங்கி, அந்த படத்தில் நடித்தேன். ஆனால், அந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்திருக்க கூடாது. எனக்கு அப்புறம் வர்ற, எனக்காக இருக்கும் குடும்பத்தையும் பார்க்க வேண்டும். இல்லையென்றால், பொறுப்புணர்வு இல்லாதவனாக ஆகி விடுவேன். இனி, சத்தியமாக, 'அவன் இவன்' படம் மாதிரி ரிஸ்க் எடுக்கவே மாட்டேன்.
3) நடிகர் சங்கத்தில் உங்க தலைமையில், ஒரு அணி ரெடியாகுதாமே?
எல்லாரும் கொஞ்சம் தவறா நினைக்கிறாங்க. விஷால் நாற்காலி பிடிக்க போறதா சொல்றாங்க. நிச்சயமா இதெல்லாம் இல்லை. 'சங்க கட்டடம் என்னாச்சு, நீங்க கட்ட போற பில்டிங் எப்ப கட்ட போறீங்க' என, உறுப்பினர் என்ற முறையில் கேள்வி கேட்கிறேன். நிறைய நடிகர்கள், இதே கேள்வியை கேக்க நினைக்கிறாங்க. இனிமேல், நாங்க எல்லாத்திலும் பங்கேற்போம். அதற்காகத்தான் பொதுக்குழுக்கு போனோம். எங்க நியாயமான கேள்விக்கு, அவங்க பதில் சொல்லி இருக்காங்க. அது செயல்படும்போது, ரொம்ப சந்தோஷம். செயல்படவில்லை என்றால், கேள்வி கேட்டுட்டே இருப்பேன்.
4) புரட்சி தளபதி பட்டம் பொருத்தமா இருக்கும் போல?
(வாய் விட்டு சிரிக்கிறார்) மலைக்கோட்டை ரிலீஸ் அப்போ, இந்த பட்டம் கொடுத்தாங்க. புரட்சி தளபதி பட்டம் எனக்கு பொருத்தமாவே இருக்குன்னு சொன்னா, இவன் ரொம்ப ஆணவத்தில சொல்றான்னு சொல்வாங்க. இதை விட்டுடலாம். இந்த பட்டத்தை கொடுத்தவங்களுக்கு நன்றி. இந்த பட்டம், பதவி இல்லாத விஷாலை, எல்லாருக்கும் பிடிக்கும்.
5) விஷால் பிலிம் பேக்டரி துவங்க காரணம்?
எல்லாத்துக்கும் கோபம் தான் காரணம். ஒரு படத்துக்காக சமீபத்தில், ரொம்ப போராடினேன். சென்சாரில் இருந்து, ஜெராக்ஸ் எடுக்கும் வேலை வரைக்கும், இழுத்து போட்டு செய்தேன். அந்த படத்துக்கான வேலை, செலவு செய்த நேரம், அதில் சந்தித்த பிரச்னை இதெல்லாம் தான், விஷால் பிலிம் பேக்டரி துவங்க காரணம். நடிகர்கள், புதுமுக இயக்குனர்கள் நிறைய பேருக்கு வாய்ப்பு தரணும் என்ற எண்ணத்தில் தான், விஷால் பிலிம் பேக்டரினு வச்சேன். என்னை வச்சி மட்டும் படம் பண்ண நினைத்திருந்தால், விஷால் பிலிம்ஸ்னு மட்டும்பேர் வைச்சிருப்பேன்.